Monday, 19 October 2015

வேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா?

வேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா?
கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்!
வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா?
ஏன் அப்படிச்செய்யவில்லை பகவானே? என்று கேட்கப்பெற்ற
போது கிடைத்த பதில் -. அதிரவைக்கும் பதில்
---------------------------------------------
பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர்
உத்தவர். இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ
வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.
துவாபரயுகத்தில், தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், "உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர்
என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர்.
ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள்,
தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே,
எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்" என்றார்.
தனக்கென எதையும் கேட்காவிட்டாலும்,சிறு வயது முதலே கண்ணனின்செயல்களைக்கவனித்து வந்த உத்தவருக்கு,
சொல் ஒன்றும்,செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின்லீலைகள்,
புரியாத புதிராக இ ருந்தன.அவற்றுக்கானகாரண, காரியங்களைத்
தெரிந்து கொள்ள விரும்பினார்.
"பெருமானே! நீ வாழச் சொன்னவழி வேறு; நீ வாழ்ந்து காட்டியவழி
வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில், நீ ஏற்றபாத்திரத்தில்,
நீ புரிந்த செயல்களில்,எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு.அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக
இருக்கிறேன்.நிறைவேற்றுவாயா?"என்றார் உத்தவர்.
உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: "கண்ணா! முதலில் எனக்கு ஒரு
விளக்கம் வேண்டும்.கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன்.
உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள்.
நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த
ஞானியான நீ, 'உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த
விளக்கத்தின் படி, முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம்
இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன்
அப்படிச் செய்யவில்லை? போகட்டும். விளையாட ஆரம்பித்ததும்,
தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து,வஞ்சகர்களுக்கு
நீதி புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன்
செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம்.
தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள்
நுழைந்து தடுத்திருக்கலாம்.அதையும் நீ செய்யவில்லை.'
திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம்வைத்து ஆடு.
இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால்
விட்டான் - துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால்,
அந்த பொய்யான பகடைக்காய்கள் தருமனுக்குச் சாதகமாக
விழும்படி செய்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை
ஏற்பட்ட போதுதான் சென்று, ';துகில்தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன்,
குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர்சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய
மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்
படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத்பாந்தவன்?
இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?'
என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.
இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்து
விட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை.நமக்காக
இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.
பகவான் சிரித்தார். "உத்தவரே! விவேகம் உள்ளவனே ஜெயிக்க
வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த
விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்"
என்றான் கண்ணன்.
உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்.
"துரியோதனனுக்கு சூதாடத்தெரியாது.ஆனால், பணயம் வைக்க
அவனிடம் பணமும்,ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம்
நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச்
சூதாடுவார்’ என்றான் துரியோதனன். அது விவேகம். தருமனும்
அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு,' நானும் பணயம்
வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன்
பகடைக்காயை உருட்டுவான்' என்று சொல்லியிருக்கலாமே?
சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்?
நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது,அவன் கேட்கும் எண்ணிக்கைளை
என்னால்தான் போடமுடியாதா? போகட்டும். தருமன் என்னை
ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது
மன்னித்து விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான். 'ஐயோ! விதி வசத்தால் சூதாட
ஒப்புக் கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்னுக்கு
மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன்மட்டும் சூதாட்ட
மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக்
கொண்டான். என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு
அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக் கூடாதென
என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனது
பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று
மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு நின்றேன்.
பீமனையும், அர்ஜுனனையும், நகுல-சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும்,
தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர,
என்னைக் கூப்பிட மறந்து விட்டார்களே! அண்ணன் ஆணையை
நிறைவேற்ற துச்சாதனன்சென்று, திரௌபதியின் சிகையைப்
பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை.
அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து வாதங்கள்
செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை!
நல்லவேளை..துச்சாதனன் துகிலுரித்த போதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி...ஹரி...அபயம் கிருஷ்ணா! அபயம்’ எனக் குரல் கொடுத்தாள். பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற
அப்போதுதான் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும்
சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச்
சம்பவத்தில் என் மீது என்ன தவறு?" என்று பதிலளித்தான் கண்ணன்.
"அருமையான விளக்கம் கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால்,
ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?"
என்றார் உத்தவர்.
"கேள்" என்றான் கண்ணன்.
"அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை
நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர்களுக்கு உதவ
வரமாட்டாயா?"
புன்னகைத்தான் கண்ணன். "உத்தவா, மனித வாழ்க்கை அவரவர்
கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை;
அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே!
அதுதான் தெய்வ தர்மம்" என்றான்.
"நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று,
நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய்.
நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து
பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே
இருக்க வேண்டும். அப்படித்தானே?" என்றார் உத்தவர்.
"உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக
உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை
நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினை
களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்து
விடும் போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்து
விடலாம் என்று எண்ணுகிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும்
சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல்
சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது
அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும்
இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட
நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?" என்றான்
ஸ்ரீகிருஷ்ணன்.
உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா!
எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்!
பகவானைப் பூஜிப்பதும் பிரார்த்தனை செய்வதும், அவனை
உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! "அவனின்றி ஓர்
அணுவும் அசையாது" என்ற நம்பிக்கை வரும்போது, அவன்
சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க
முடியும்? அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்?
இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன்
அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.
அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழி நடத்தினானே தவிர,
அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை
அதுதான் பகவானின் மேன்மை!
---------------------------------------------
இணையத்தில் படித்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்,

Sunday, 4 October 2015

பக்தியை பெருக்குங்கள்!

பக்தியை பெருக்குங்கள்!
தராசு முள் நேராக ஒரே நிலையில் இருக்க வேண்டுமானால், அதன் இரண்டு பக்கத் தட்டுகளும் ஒரே பளு உள்ளதாக இருக்க வேண்டும். தட்டுகளில் உள்ள பளு கூடுதலாகவோ, குறைவாகவோ இருந் தால், நேராக நிற்காமல் இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் தராசு முள் ஆடிக் கொண்டிருக்கும்.

அதுபோல, மனம் ஒரே நிலையில் இருக்க வேண்டுமானால், மனதின் அடித் தளத்தில் விருப்பு, வெறுப்பு ஏதுமின்றி இருக்க வேண்டும்; அதில் ஏற்றத் தாழ்வு இருப்பின், மனமும் அலைபாயும்.
ஒரு தட்டில் ஆசைகள் அனைத் தையும் வைத்து, மற்றொரு தட் டில் பக்தியை வைத்துப் பார்த் தால், பக்தியே பளுவானது; வலுவானது. மற்ற விஷயங் களில் ஆசையை விட்டு, பகவானுடைய சரணங்களில் ஆசை வைத்தால் அவனையே பிடித்து விடலாம்.

சரணடைந்தவர்களை அவன் உதறித் தள்ளுவதில்லை; கை தூக்கி விடுகிறான். பக்தி செய்து சரணடைந்தால், பகவான் முக்தியளிக்கிறான். நமக்கு இப்போது கிடைத் துள்ள மனிதப் பிறவி புதிதாக முதன் முதலாகக் கிடைத்ததல்ல; இதற்கு முன் எத் தனையோ பிறவி எடுத்தாகி விட்டது. ஆத்மா அழிவற்றது. அது, மேலும், கீழும் போய்ப் போய் வருகிறது. கர்ம வினை தீர்ந்து, புண்ணிய பலன் ஏதாவது இருந்தால், இன்னும் கொஞ்சம் உயர்ந்த ஜென்மா கிடைக்கிறது.

இப்படி புண்ணிய பலன் கூடு தலாக, கூடுதலாக, பட்சி, பிராணி, பசு, மனிதன் என்று வரிசையாக பிறப்பு வருகிறது. மனித ஜென்மாவில் கூட எத்தனையோ மனித ஜென்மா எடுத்து புண்ணியம் சேர்ந்திருந்தால், இந்த மனித ஜென்மாவிலும் சுகபோகங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு! புண்ணிய காரியம் செய் வதற்கும் பிராப்தம் இருக்க வேண்டும்; அது இல்லாவிடில், மனம் அதில் ஈடுபடாது; வேறு எதிலோதான் ஈடுபடும்.

புண்ணிய காரியம் என்றால், தானதர்மங்கள் செய்வது மட்டுமல்ல; தெய்வ பக்தி, தெய்வ தரிசனம், ஆலய தரிசனம், புண்ணிய தீர்த்த ஸ்நானம் இவைகளுக்கும் புண்ணியம் உண்டு. இதையும் தவிர, மகான்கள் தரிசனம் பெரிய புண்ணியம். நாம் இப்போது மனிதப் பிறவியை அடைந்துள்ளோம். இதற்கு முன், ஜென்மாவில் நாம் மேற்கூறிய எதையாவது செய்திருக்கலாம்; மகா புருஷர் களை தரிசித்திருக்கலாம். எல்லா காலங்களிலும் மகா புருஷர்கள் இருந்திருக்கின்றனர். ஏதோ ஒரு காலத்தில், யாரோ ஒருவரை நாம் தரிசித்திருக்கலாம்; வணங்கி இருக்கலாம்.

அது நமக்கு தெரியாவிட்டாலும் கூட, இப்போது கிடைத் துள்ள மனித ஜென்மாவையும், அனுபவிக்கும் சுகங்களையும் வைத்துப் பார்த்தால், இதற்கு முன் யாரையோ தரிசித்த புண் ணியம்தான் காரணம் என்று யூகிக்கலாம். அதே போல, இந்த ஜென் மாவிலும் இப்போதுள்ள மகான்களையும் தரிசித்து வணங்கி விட்டால், தெய்வபக்தி செய்து வந்தால், அடுத்த பிறவி இன்னும் சிறப்பாக இருக்கும்.

உலக மாயையில் சிக்காமல், அஞ்ஞானம் விலகி, ஞானம் ஏற்பட்டு சர்வமும் ஈஸ்வர மயம், எல்லாமே பரம்பொருள் என்று எண்ணுகிற நிலையெல்லாம் வந்த பிறகு தான் முக்தி என்கிற மோட்ச சாம்ராஜ்யத்தை அடைய முடியும். இப்போது அதன் எல்லைக் கோடு வரையிலாவது போக முடியுமா என்பதுதான் கேள்வி.

மகான்கள் தரிசனம், தெய்வ பக்தி இவைகளை விருத்தி செய்து கொண்டே போனால், எப்போதோ, எந்தக் காலத் திலோ பகவானோடு சேர்ந்து விடலாம். முயற்சி செய்ய வேண்டும்; நம்பிக்கை இருக்க வேண்டும்.

கோயிலில் வழிபடும் முறை!

கோயிலில் வழிபடும் முறை!

கோயிலுக்கு செல்பவர்கள் வழிபாட்டிற்கான அடிப்படை வழிமுறை!

தொலைவில் இருந்தே கோபுரத்தை தரிசனம் செய்ய வேண்டும்.
கோபுரவாசலைக் கடந்ததும், கொடிமரத்தை வணங்கியபடியே கோயிலுக்குள் நடக்க வேண்டும்.

ஆண்டவனைச் சரணடைகிறேன் என்பதே கொடிமர வழிபாட்டின் நோக்கம்.
பலிபீடத்தின் முன்னால் தலை தாழ்த்தி வணங்க வேண்டும்.

இறைவா! என்னிடம் உள்ள ஆணவம் முதலிய தீயகுணங்களை இங்கேயே பலியிடுகிறேன், அதற்கு அருள்செய், என்பதே பலிபீடத் தத்துவம்.
இப்போதுதான் சுவாமி தரிசனத்திற்கு நாம் தகுதி பெறுகிறோம். பின்பு விநாயகப்பெருமானை வணங்கி, தலையில் குட்டி, தோப்புக்கரணம் இட வேண்டும்.



தடையின்றி வழிபாடு இனிதே அமைய பிரார்த்திக்க வேண்டும்.

சிவாலயத்தில் நந்திதேவரையும், பெருமாள் கோயில்களில் கருடாழ்வாரையும் தரிசித்து அவர்களிடம் மானசீகமாக அனுமதி பெற்ற பின்னர் கருவறை நோக்கிச் செல்ல வேண்டும்.

தேங்காய், பூ, பழம், வெற்றிலை, பாக்கு, தீபம் ஆகியவற்றில் ஏதோ சிலவற்றைக் கொடுத்து வணங்க வேண்டும்.

தீபாராதனை காட்டும் போது தீபஜோதியின் நடுவே காட்சிதரும் மூலவர் மீது கண்ணையும், கருத்தையும் செலுத்தி பக்தியோடு ஒன்ற வேண்டும்.

பிறகு அம்மன் சன்னதி சென்று அம்பாளை மனதார வேண்டும்.

முருகன்                                சக்கரத்தாழ்வார்
நடராஜர்                               நரசிம்மர்
தட்சிணாமூர்த்தி                   தன்வந்திரி
துர்க்கை                               ஆண்டாள்
சண்டிகேஸ்வரர்                  ஆஞ்சநேயர்
மற்றும் பரிவார தேவதைகளை வணங்கி பிரகாரத்தையும்,
நவக்கிரக மண்டபத்தையும் வலம் வர வேண்டும்.

கொடிமரத்தின் முன் வடக்கு நோக்கி விழுந்து (தலை வடக்கிருக்கும் படியாக) பெண்களாக இருந்தால் இரண்டு கை இரண்டு கால் தலை ஆகிய ஐந்து உறுப்புகள் தரையில் படுமபடியான பஞ்சாங்க நமஸ்காரமும் ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும் படியான சாஷ்டாங்க நமஸ்காரமும்  செய்ய வேண்டும். வழிபாட்டின் நிறைவாக சிறிது நேரம் அமர்ந்து கண்ணை மூடி அமர்ந்து தியானம் செய்து,
இறை சிந்தனையுடன் வெளியேற வேண்டும்.

குலதெய்வம்

குலதெய்வங்கள் என்றால் என்ன ..? அவர்களின் பெருமை என்ன...? குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...? குலதெய்வம் :
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. அதன் சக்தியை அளவிடமுடியாது...
எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் *குலதெய்வங்கள்* என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.
குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை. இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது?
நம் முன்னோர்கள்...
அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை... இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்...
இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று... அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.
இது எத்தனை தூரப்பார்வையோடு, வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்!...
விஞ்ஞான முறையில் யோசித்தால்... ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே...
ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம். இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது. தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும்... இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும்... பிறக்கின்றது. என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது. ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது...
வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும், முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து...
இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு...  தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது. இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண்
குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்... பெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர்... பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை... ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று. மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம். எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்...
அதனால் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது... பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான். பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்... புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்...
திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது... அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும். இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள். ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்... குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.
குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான். எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள். அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள். அக்கோவிலுக்கு உதவுங்கள். ஒவ்வொருவரின் கண் கண்ட முதல் குலதெய்வம் பெற்ற தாயும், தந்தையும் தான்...
"தாயிற் சிறந்த கோவிலுமில்லை...
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை..."

எனவே, நம் முதல் குலதெய்வமான பெற்றோர்களை போற்றுங்கள்...